உலக பதினொருவர் அணி வென்றது

| 14 September 2017

 

இலங்கை அணியின் திஸர பெரேரா, அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்த, பாகிஸ்தான் அணிக்கெதிரான சுதந்திரக் கிண்ணத்துக்கான தொடரின் 2ஆவது போட்டியில், உலக பதினொருவர் அணி வெற்றிபெற்றது.

 

லாகூரில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓடட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட்டுக்காக 4.5 ஓவர்களில் 41 ஓட்டங்கள் குவிக்கப்பட, தொடர்ந்து வந்த வீரர்களும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக, இறுதி ஓவரில் 17 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன.
துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம் 45 (38), அஹமட் ஷெஷாத் 43 (34), ஷொய்ப் மலிக் 39 (23) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் திஸர பெரேராவும் சாமுவேல் பத்ரியும், தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

175 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய உலக பதினொருவர் அணி, 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஓரளவு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றாலும், வேகமாக ஓட்டங்களைப் பெற, உலக பதினொருவர் அணி தடுமாறியது. அப்போது, 36 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பெற வேண்டுமென்ற நிலை காணப்பட்ட போது, திஸர பெரேரா களமிறங்கினார். குறிப்பாக, தென்னாபிரிக்க அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லரை முந்திக் கொண்டு, திஸர களமிறக்கப்பட்டார்.

 

ஒரு கட்டத்தில், 2 ஓவர்களில் 33 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரில், 20 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. அவற்றில் 18 ஓட்டங்களை, திஸர பெற்றுக் கொண்டார். இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட, இறுதி 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் என்ற நிலை ஏற்பட்டது. 20ஆவது ஓவரின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட திஸர பெரேரா, அதை 6 ஓட்டங்களுக்கு விளாசி, வெற்றியைப் பெற்றுக் கொண்டார். துடுப்பாட்டத்தில் ஹஷிம் அம்லா ஆட்டமிழக்காமல் 72 (55), திஸர பெரேரா 47 (19) ஓட்டங்களைப் பெற்றனர்.

 

போட்டியின் நாயகனாக, திஸர பெரேரா தெரிவானார்.

 

தொடரின் முதலாவது போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், தொடரின் நிலை, 1-1 என மாறியுள்ளது. இந்நிலையில், நாளை இடம்பெறவுள்ள 3ஆவது போட்டி, தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக மாறியுள்ளது.

scroll to top